சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 12 சூன் 1918 – மார்ச் 10, 2001) இலங்கைத் தமிழ் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், கல்வியாளரும், தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.
எலியேசர் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிறிட்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் பவுல் டிராக்கின் வழிகாட்டலில் டாக்டர் (DSc) பட்டமும் பெற்றார்.
எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக அமைதிக்காக அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.
1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுழியம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படைத்தார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (La Trobe) பல்கலைக்கழகத்தில் பயன்முகக் (பிரயோக) கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978ஆம் ஆண்டில் விக்ரோறியா மாநில ‘இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்’ தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.
இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன், மாமனிதர் விருதினை பேராசிரியருக்கு வழங்கினார். முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நேர்மின்னி (புரோத்தன்) ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி (இலத்திரன்) ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் (radially) செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் (Lorentz-Dirac) சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் ‘எல்லை அடைவாக அதிகரிக்கும்’ (asymptotically) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் எனப்படுகிறது